ஞாயிறு, 11 டிசம்பர், 2016



சுய அலசல்


என் குணம்
யாரைக் கண்டும் எவரை கண்டும் அச்சமென்பதில்லையே
போரை பிணியை கண்டதாலே மிச்சமெதுவுமில்லையே


என் ஆசைகள்ஒன்றா இரண்டா இருக்குது ஆயிரம்
எண்ணிலடங்கா சிகரத்தின் உயரம்


என் வழி
கண்ணின் காட்சியின் வண்ணங்களே,
செயலாய் மாறுது நல்லெண்ணங்களே!


என் செயல்
கழுத்துக்கு கத்தி வந்த போதும் பேசுவேன்
அநியாயம் நடப்பது கண்டால் ஏசுவேன்!


என் பேச்சு
நன்றாக இருக்க வேண்டுமென்ற ஆசையை மீறி,
சிலபோது இறைத்து விடுகிறேன் சொற்களை வாரி!


என் நிலை
பறப்பதற்கு முன்பே சிறகொடிக்கப்பட்ட பறவை,
வாழ்க்கை நம்கையில் என்பதால் வராது அழுகை!


என் சோகம்
துன்பங்களையெல்லாம் தாண்டி வந்திடும் வேகம்,
அப்போதும் சிரிப்பு என்பது தான் என் சோகம்!!


என் ஆசிரியை
ஒழுங்காக இருக்கும் வரை போதிப்பார் வேதம்
ஒழுங்கற்று நடந்தால், எனக்குத்தான் சேதம்!


என் பெற்றோர்தெரியாததெல்லாம் எனக்கு தெரிய செய்தீர்
தாய்ப்பால் கடனடைக்க ஒரு வழியும் சொல்வீர்!


என் நட்பு
வருவார்கள் போவார்கள் அது அவர்கள் இஷ்டம்
சோகம் தீர்க்க ஆளின்றேன் எனக்குத்தான் நஷ்டம்!


என் அன்புக்குரியது
சொல்லத் தெரியாமல் சொல்கிறேன்,
அதன் ஒவ்வொரு இணுக்கையும் ரசிக்கிறேன்!!


என் உயிர்மிகபெரியதோ, மிகசிறியதோ கவலையை விடு
இறைவா ஆரோக்கியம் மட்டும் குறையாமல் கொடு!


என் மகிழ்ச்சி
மகிழ்ச்சியாய் வாழ்வது தான் என் மகிழ்ச்சி
வாழும் வரை இதற்காகத்தான் என் முயற்சி!


என் இறப்பு
என் முடிவுக்காக ஒருபோதும் வருந்தவில்லை
வெறுங்கையோடு ஏகன் முன் நிற்பது தான் பெருங்கவலை!!


என் பிரிவு
திருப்தியோடும் புன்னகையோடும் இறப்பேன்,
மாமனிதர் வரிசையில் என்றென்றும் இருப்பேன்!


என் ஆத்மா
நான் நானாகவே இல்லாத போது
என் ஆத்மாவுக்கு அங்கே வேலையேது?


என் உடன்வரவு
இதை நினைத்தால், நெஞ்சில் கொட்டுகிறது ரத்தம்,
உடன் வருவதோ, என் நற்செயல்களின் மொத்தம்!!


என் சொர்க்கம்இறைவனிடம் எங்ஙனம் செய்வேன் தர்க்கம்,
என் தகுதிக்கு தக்கவாறு தருவான் சொர்க்கம்!!


என் இறைவன்பேச ஒரு வார்த்தையில்லை, கேட்க ஒரு கேள்வியில்லை,
கேட்காமலே தருவதால், அவனை விட்டால் நாதியில்லை!!


நான் இல்லை
இனி, ‘என்’ என்ற வார்த்தைக்கு பொருளேது?
நான் சிரித்தழ முடியுமா என்பது கூட தெரியாது!



-சுமஜ்லா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக