| இவனா யிரு |
உழுது விதைப்பவன்
உணவை விளைக்கிறான்
எழுதிப் படைப்பவன்
எண்ணம் விதைக்கிறான்.
தொழுது துதிப்பவன்
தூய்மை யுறுகிறான்
பழுது அற்ற நற்
பண்பைப் பெறுகிறான்
பொழுது புலர்கையில்
ஒழுகும் கதிரைப்போல்
முழுதும் நல்லதாய்
ஒழுக்கம் வளர்க்கிறான்
விழுது விட்ட பழம்
ஆலைப் போலவே
தழுவும் குளிர்ச்சியாய்
நிழலும் விரிக்கிறான்
எழுது கோலினால்
உலகை வெல்கிறான்
அழுது புலம்பும் சிலர்
அறிவைப் பழிக்கிறான்
கழுகுப் பார்வைக்கு
நழுவும் கோழிபோல்
அழுக்கு மனங்களை
இழுக்காய்த் தவிர்க்கிறான்
மெழுகு உருகவே
துலங்கும் தீபம்போல்
கொழுந்துவிட்டச் சுடர்
வெளிச்சம் தருகிறான்
காலம் கடந்துபின்
ஞாலம் துறப்பினும்
நாலும் ரெண்டும்போல்
நாவில் நிலைக்கிறான்
சின்னஞ் சிறியதாய்
வார்த்தை கோக்கிறான்
பெற்றம் பெரியதாய்
ஞானம் வார்க்கிறான்.
தனக்கு வாய்த்த சந்
தோஷம் பகிர்கிறான்
தன்னைப் போல யவர்
சிறக்க நினைக்கிறான்
பட்டுத் தெளியுமுன்
பலதும் சுட்டுவான்
பசிக்கும் செவிக்குத் தேன்
பாகை யூட்டுவான்
ஏழாம் அறிவென
ஏய்க்கும் உலகிலே
எழுதி நிலைத்திடும்
இவனாய் இருந்திடு!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக