புதன், 30 நவம்பர், 2016




குளிருதுங்கோ...!

ஊரில் பனிக்காலம்
உடலுதறும் குளிர்காலம்...
உல்லங் கையுரச
உதிரத்தில் உஷ்ணமேறும்!

குழல் விளக்கின் வெளிச்சம்கூட
குளிர் அணுக்கள் சுமக்க...
ஒன்பது மணிக்கெல்லாம்
ஊர் அடங்கிப்போகும்!

கம்பளிப் போர்வைக்குள்
கால் மடக்கி உறங்க...
சுவர்க்கோழி சப்தம்கூட
சுரத்தின்றி கேட்கும்!

ஜட்டி யணியா பசங்களுக்கு
வேட்டி தானே போர்வை...
தலைக்குமேலே இழுத்துப் போர்த்த
தகிடுதத்தோம் குளிர்!

கரன்ட் போன காலத்திலே
கதவிடுக்கில் குளிர்...
திரியை சற்று தூண்டி வைக்க
திக்கித் திணறும் குளிர்!

குத்துவிளக்கு வெளிச்சத்திலே
பத்து விளக்காய் அவள்...
மண்ணெண்ணெய் புகையினிலும்
மல்லிகைப்பூ மணம்!

வீட்டார் அனைவரும்
விடிந்தும்கூட உறங்க...
ஹீட்டர் போட்டு குளிப்பர்
புத்தம்புது மாப்பிள்ளைகள்!

அரைவேக்காட்டு முட்டையும்
அப்பதான் போட்ட டீயும்...
அறைக்குள் கொணர்வதற்குள்
'ஆறி அலர்ந்து' போகும்!

விரட்டவந்த கதிரவனை
மிரட்டிப் பார்க்கும் குளிர்...
விடியற்காலையிலே
வீதியெலாம் ஜிலீர்!
குளத்துமேட்டு டீக்கடையில்
கூரைமேலே புகை...
'ஆத்தாத' டீயிலேயும்
தாத்தாவின் வாயிலேயும்
ஆவி வரவழைக்கும்
அதிகாலை குளிர்!

தேங்காய் எண்ணெய்க்குள்
உறைந்திருக்கும் குளிர்!
தீண்டும் விரல்களிலும்
மறைந்திருக்கும் குளிர்!

முருக்கு வத்தல் பொறியல்
மொறுமொறென்ற பப்படம்...
துணைக்கறியாய் இல்லையெனில்
சவசவக்கும் சாப்பாடு!

பஸ் ஸ்டான்ட் கதகதப்பில்
அசைபோடும் பசு...
பால் வண்டி மணி...
தலையை சுற்றிய ம்ஃப்ளருக்குள்
சவரம் துறந்த முகம்...
கைகட்டி வாய் நடுங்கும்
குளிருக்கு மரியாதை!

அமெரிக்கப் பனியும்
அரபு நாட்டுக் குளிரும்
உடல் வதைக்கும் உபாதை!
அதிரைப்பட்டினத்து
அளவான குளிரோ...
அனுபவிக்க உடல் ஏங்கும்
அசைபோட மனம் இனிக்கும்!

சபீர் (நன்றி: ஜாகிர்)
இது ஒரு குளிர்கால ஸ்பெஷல் ! மீள்பதிவு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக